Kathayi Amman

Monday, July 27, 2015

காத்தாயி அம்மன்

தமிழ்நாட்டின் பல கிராமங்களில் காத்தாயி அம்மன் சிறப்பாக வழிபடப்படும் தெய்வம். காத்தாயி அம்மனோடு பச்சையம்மன், பூங்குறத்தி மற்றும் சப்த முனீசுவரர்களையும் காணலாம். வெட்ட வெளியில், தென்னை மரங்களின் பின்னணியில் அவர்களைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது. வாள் ஏந்தி மிக உயர்ந்த உருவாக நிற்பதும், அவரது கால்களுக்கிடையே பாதாள, நரகலோக அரக்கன் ஒருவனின் தலை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார் வாள்முனி.
அவரோடு, லலாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி ஆகிய அறுவரும் சேர்த்து, அன்னை பராசக்தியான காத்தாயியின் ஏழு புதல்வர்கள் ஆவர். இவர்களை ஆறுமுகப் பெருமானின் அம்சம் என்றும் கூறுவர். வீரமும் கருணையும் கொண்ட காவல் தெய்வங்கள் அவர்கள். தவக்கோலத்துடன், வீரவேற்கோலமும் கொண்டு, அன்னையின் ஏவலை ஏற்று, பக்தர்களின் தீமைகளை அகற்றி, நன்மையை சேர்க்கும் அந்த அருளாளர்கள், வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.
வேத முதல்வனாகிய சிவபெருமானின் திருமேனியில் இடப்பாகத்தில் இடம் பெறுவதற்காக கச்சி ஏகம்பரைப் பணிந்து வணங்கி வழிபட வந்தாள், உமையம்மை. அந்தப் பரம்பொருளை அடைந்திட, காஞ்சி மாநகரில் அவள் காமாட்சியாக ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்றபடி தவமிருந்தாள். கம்பா நதிக்கரையில் நீராடி, திருநீறணிந்து ருத்திராட்சக் கண்டிகையும் அணிந்து அவள் தவமிருக்கையில், வெள்ளம் பெருக்கெடுத்தது.
அப்போது தான் வழிபட்டு வரும் சிவலிங்கத் திருமேனி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்ற அச்சம் கொண்ட அன்னை, ஏகம்பநாதராகிய ஏகநாயகனை, தனது இரு கரங்களாலும் மார்போடு சேர அணைத்துக் கட்டிக் கொண்டாள். இறைவனுக்கு, ‘தழுவக் குழைந்த ஈசன்’ என்ற திருநாமத்தையும் பெற்றுத் தந்தாள்.
சிவ புராணத்திலும், காஞ்சி புராணத்திலும் விரிவாகக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிகள், காலப்போக்கில் கிராமங்களில் சற்றே உருமாறி காத்தாயி அம்மன் தவம், மன்னார்சாமி காத்தாயி திருமணம் என்று வழங்கப்பட்டு வருகிறது. அதுவே காலப்போக்கில் விரிவாக்கம் பெற்று, காத்தாயி அம்மனுக்கும் அவளது பரிவார தேவதைகளுக்கும் தனிக்கோயில் எழுப்பி, குலதெய்வமாகக் கொண்டாடிடும் மரபினையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமங்களில் எண்ணற்ற காத்தாயி அம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
 
தெய்வமான பெண்கள் அனைவரையுமே மக்கள் பச்சையம்மனின் சகோதரிகளாகவே வணங்குகின்றனர். அவர்களையே தங்கள் குலதெய்வமாகவும், துணைத் தெய்வங்களாகவும் வழிபடுவது தமிழரின் பண்டைய மரபு. தமிழகத்தில் பல இடங்களில் தீப்பாய்ந்த அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன. “சிதக்னி குண்டசம்பூதாயை நம” என்று லலிதா சகஸ்ர நாமத்திலும் இடம் பெற்றுள்ளாள் அவள்.
காத்தாயி அம்மனுக்கு இடதுபுறம் காட்சி தருகிறாள் பச்சையம்மன். பச்சை நிற முகத்தை உடையவளாக, மரகதமேனி மருக்கொழுந்தாக, மார்பில் முத்தாரம், கழுத்தணி, காதணியோடு, கையில் வளையலும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்துள்ளாள். பச்சை நிறத்தாலான பாவாடை, தாவணி. பார்க்கின்ற கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் பச்சை நிறம் கொண்டு, தனது எல்லைக்குட்பட்ட மக்களையும் கால்நடைகளையும் காத்து நிற்பவள் அவள். கங்கையின் அம்சமாக உருவெடுத்தவள்தான் பச்சையம்மன்.
வள்ளியம்மையின் அவதாரமாகக் கருதப்படுபவள் பூங்குறத்தி. நடந்தவை, நடக்க விருப்பவை என அனைத்தையும் குறி சொல்லி, அருள்வாக்கு கூறுகிறாள் இவள்.
 
அகிலம் போற்றும் புராணங்கள் புகழும் சப்த முனீசுவரர்கள், காத்தாயி அம்மன் கோயில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். இருளைப் போக்கிடும் செந்நிறத் திருமேனி கொண்டவராக செம்முனி, தீமைக்குக் காரணமான மருளை நீக்கும் அருளை உடைய வாழ்முனி, குறையாத செல்வங்களை அருளும் கும்ப முனி, ஞானத்தையும், அறிவாற்றலையும் தந்திடும் லலாடமுனி, யோகத்தின் பயனைத் தரும் ஜடாமுனி, நாதமாய் நிலவி நயமாய் அருள் செய்திடும் நாதமுனி மற்றும் முத்து மாலைகள் அணிந்து யோகியரில் முத்தாக விளங்கும் முத்துமுனி ஆகியோர்களே இவர்கள். சங்கடம் தீர்க்கும் சங்கிலிக் கருப்பனோடு, வினை தீர்க்கும் வில்லாளனாக பாம்பாட்டி வீரன், காட்டு வெளி செல்லும்போது காக்கின்ற கருமுனியும், காத்தாயி அம்மன் கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
அடியார்களின் நெஞ்சில் குடிகொண்டுள்ள செங்கமலத் திருவடியும், சிலம்பு அணிந்த சிற்றடி, அருமறை சிரமதில் சுடர் ஒளியும், முடிகொண்ட படர் அரவும், மதிநிகர் முகமும், அருள்சோதி புன்முறுவலும், முக்கண் நோக்கும், நெற்றியில் சுட்ட வெண்ணீறும், கரிகுழலும் மிளிர, செம்பட்டு உடையில், செங்கமலத்தை வலக்கரத்தில் ஏந்தி, அஞ்சேல் என அபயமளித்தபடி கொலுவீற்றிருக்கும் காத்தாயி அம்மன், தன்னை நாடி வந்தோர்க்கெல் லாம் தாயாகவே விளங்குகிறாள்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

காத்தாயி என்பது காற்று ஆயி – ஆவிரூபமான பேய்த் தெய்வம். பேச்சாயி என்பது பேய்ச்சி ஆயி –பிடாரி ஒரு குரூரக் கடவுள் என்றெல்லாம் இதுவரை எண்ணியிருந்தோம். இங்கே ஸ்ரீ பெரியவர்கள் தரும் அற்புத விளக்கத்தைப் பாருங்கள்.:
நவராத்திரியில் துர்க்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா சஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது, அவளே சிருஷ்டி செய்பவள் [ஸ்ருஷ்டிகர்த்ரி-ப்ரம்மரூபா], அவளே பரிபாலனம் செய்பவள் [கோப்த்ரீ-கோவிந்த ரூபிணி], அவளே சம்ஹாரம் செய்பவள் [ஸம்ஹாரிணீ-ருத்ர ரூபா], என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மகாலக்ஷ்மியாகவும் சரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ’பிரம்ம விஷ்ணு சிவாத்மிகையை நம:’ என்று வருகிறது. சரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ’பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, காப்பு, அழிப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்க்கையாக இருக்கிற போது வீரம், சக்தி எல்லாம் தருகிறது; மகாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது; சரஸ்வதியாகி ஞானம் தருகிறது.
ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதி என்று சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மகாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். சரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.
பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து பிறந்த மகாலக்ஷ்மியும் இரண்டு மகரிஷிகளுக்கும் பெண்களாக அவதரித்திருக்கிறார்கள்.
மகாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மி தேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்குப் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.

இப்படியே காத்யாயன மகரிஷி சாட்சாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பித் தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று.
தெய்வத்தைக் குழந்தையாக் வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. ’குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால் ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக் கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் ’குழந்தையாய் இரு’ என்கிறது.
சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மகாலக்ஷ்மியைப் பார்கவியாகவும் குழந்தைகளாக்கி அந்த பாவத்திலேயே வழிபட்டால் நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர் ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ஃப்ரூப் என்று, குரோத ஃப்ரூப், சோக ஃப்ரூப் எல்லாமாகி, சாந்தமாக இருப்போம். குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீ மாதாவாக இருக்கிற தேவி நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.
குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள் கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். ’காத்தாயி’ என்று சொல்கிற கிராம தேவதை ’காத்யாயனி’ தான் என்று நினைக்கிறேன்.
’பட்டாரிகை’ என்று பெரிய ஸ்ரீ வித்யா உபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான் நம் கிராம மக்கள் ’பிடாரி’ என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் ’பட்டாரிகா மான்யம்’ என்பதை ’படாரி மானியம்’ என்று குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.
இவ்வாறே நம் கிராம ஜனங்களும் கூட சரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். ’பேச்சாயி’ என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி சரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.
அம்பாளையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜித்து எல்லோரும் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக!